பிரேஸில் அதிபர் Jair Bolsonaro 4 நாள் அரசு முறைப்பயணமாக புதுதில்லி வந்தடைந்தார்.
தனி விமானம் மூலம் நேற்று மாலை புதுதில்லி வந்த பிரேஸில் அதிபரை பாலம் விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் திரு.வி முரளிதரன் வரவேற்றார்.
பிரேஸில் அதிபர் Jair Bolsonaro நாளை நடைபெறும் குடியரசுத் தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இன்று குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவரை முறைப்படி வரவேற்கவுள்ளார்.
பிரதமர் திரு.நரேந்திரமோடியையும் பிரேஸில் அதிபர் சந்தித்து பேசவுள்ளார். அதன்பின்னர் பிரேஸிலுக்கும் இந்தியாவுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன.
பிரேஸில் அதிபருடன் அந்நாட்டின் 8 அமைச்சர்கள், 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் தில்லி வந்துள்ளனர்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் திரு.நரேந்திர மோடி பிரேசில் அதிபருக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் அவருடன் இணைந்து பங்கேற்க ஆர்வத்துடன் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு மேலும் வலுப்பட இந்தப் பயணம் உதவும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.